தி.மு.க. முன்னணி எழுத்தாளர் -கலைஞர் கருணாநிதியின் எழுச்சியூட்டும் எழுத் தோவியங்களே இப் புத்தகம்.
மக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற மாநில மாநாட்டன்று வெளியிட்டுள்ளோம்.
இதனை வெளியிட அனுமதி தந்த தோழர் மு. கருணாநிதி அவர்களுக்கு எமது நன்றி கலந்த வணக்கம்.
தலைவரே! தாய்மாரே! திராவிட மாணவ மணிகளே! வணக்கம். இந்த ஆண்டு விழாவிலே நான் பேசவேண்டியது துடிக்கும் இளமை! துடிப்பு எல்லைக் கோட்டைத் தாண்டி விடுவதும் உண்டு. அஃது என் குற்றமல்ல.
துடிக்கும் இளமை! ஆம் இளமை துடிக்கிறது. கோலநிலா வந்து கொஞ்சுகின்ற இரவில் காதலன் துடிக்கிறான். காதலி வரவில்லை. அவளுக்கு வீட்டிலே கட்டுப்பாடு அப்படி! மற்ற நாடுகளின் நிலைகண்ட அளவிலே நிலா கண்ட காதலனின் நிலை பெற்ற இளமைக்கு, திராவிட நாட்டுக் குடிமகனாக வாழவேண்டுமென்ற ஆவல் துடிக்கிறது. துடிப்பது ஆவல் மட்டுமல்ல! ஆரிய அரசு கண்டு ஆத்திரமுங்கூட, திராவிடர் நிலைகண்டு இரக்கமிருப்பினும் "இனத்திற்கு இழுக்கு விளைக்கும் இழிமகனே! ஈட்டி வருவதற்கு முன் இறந்துபோ!" என்ற எச்சரிக்கை எழுப்பும் பாசறையாக உள்ளது இளைஞர் இதயம். அமைதியோடு செயல் புரியும் ஆற்றல் இல்லையா என்று அஹிம்ஸா பிம்பங்கள் வினவலாம். கலிங்கத்தை வென்ற பிறகுதான் அசோகனுக்கு அமைதி ஏற்பட்டதாம். மதவாத மடமையை மஞ்சத்திலமர்த்தி, முதலாளிக் கொடுமையை முத்தமிட்டுக் கிடந்த ஜாரும், ரஸ்புடீனும் சாய்ந்த காரணம் சாந்த குணம் படைத்த லெனினால் அல்ல. உத்வேகத்தால் உந்தப்பட்ட ஓர் புரட்சிக்கார லெனினால்தான் அது முடிந்தது. ரஷ்யாவிலே தொழிலாளர் துயர் துடைத்தது துடிப்பின் முடிவு என்பதை யாரே மறுக்க முடியும்.
Buy Thudikkum Ilamai by M Karunanidhi from Australia's Online Independent Bookstore, BooksDirect.